ஈப்போ, ஜூன்.11-
பேரா, கிரீக் அருகில் தஞ்சோங் மாலிம் கல்வியியல் மாணவர்கள் சம்பந்தப்பட்ட விபத்து தொடர்பில் பேருந்து ஓட்டுநர், பகிரங்கமாக எந்தவோர் அறிக்கையும் வெளியிடக்கூடாது என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நூர் ஹிசாம் நோர்டின் அறிவுறுத்தியுள்ளார்.
தற்போது தைப்பிங் மருத்துவமனையில் சிகிக்சைப் பெற்று வரும் 39 வயதுடைய அந்த பேருந்து ஓட்டுநர், வீடு திரும்ப அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விபத்து தொடர்பில் அவர் எந்தவொரு தரப்பினரிடமும் கருத்துரைக்கவோ அல்லது பேட்டியளிக்கவோ கூடாது. இது விசாரணையைப் பாதிக்கும் என டத்தோ நூர் ஆலோசனை கூறியுள்ளார்.
15 மாணவர்கள் கொல்லப்பட்ட இந்தத் துயரச் சம்பவம் தொடர்பில் போலீசார், பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அந்த பேருந்து ஓட்டுநர், நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பேருந்து பிரேக் செயல்படாததால் பேருந்து கவிழும் நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்து இருந்தார்.