பெரா, ஜூன்.11-
பகாங், பெரா, சுங்கை திரியாங் ஆற்றில், கடந்த ஜுன் 9 ஆம் தேதி நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்ட இராணுவ வீரர் மனைவியின் உடல் இன்று காலையில் மீட்கப்பட்டது.
31 வயது சகிரா அகோப் என்பவரின் உடல் ஆற்றில் மிதப்பதைக் கண்ட, மெதுவோட்டத்தில் ஈடுபட்டு இருந்த ஒருவர், போலீசுக்குத் தகவல் அளித்தாக பெரா மாவட்ட போலீஸ் தலைவர் ஸுல்கிஃப்ளி நஸீர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் அந்த மாதுவின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சவப் பரிசோதனைக்காக அவரின் உடல் பெரா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.
தனது கணவர் தூண்டில் போட்டு, மீன் பிடித்துக் கொண்டு இருந்த வேளையில் ஆற்றோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த கார், திடீரென்று நகர்ந்து ஆற்றில் விழுந்ததில் காரில் இருந்த அந்த மாது, நீரின் வேகத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.