கோலாலம்பூர், ஜூன்.29-
மானியம் வழங்கப்படும் சமையல் எண்ணெய் தொடர்பாக இதுவரை 420 புகார்கள் பெறப்பட்டுள்ளதாக உள்நாட்டு வணிகம், வாழ்க்கைச் செலவின அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் 43 புகார்கள் பதுக்கல் தொடர்பானவை.
மேலும், அதிக விலைக்கு விற்றல், விற்க மறுத்தல், போதிய இருப்பு இல்லாமை, நிபந்தனையுடன் விற்றல், வெளிநாட்டவருக்கு விற்றல், விலைக் குழப்பம், கடத்தல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் மீதமுள்ள 377 புகார்களில் அடங்கும். சில்லறை விற்பனையாளர்களுக்கு உரிமம் இல்லாதது, தகுதியற்றவர்கள் அதிக அளவில் கொள்முதல் செய்வது, பண்டிகைக் காலங்களில் அதிகத் தேவை ஆகியவை தட்டுப்பாட்டிற்குக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன என அமைச்சின் செயலாக்கப் பிரிவின் இயக்குநர் டத்தோ அஸ்மான் அடாம் தெரிவித்தார்.
சமையல் எண்ணெய் முறைகேடுகளைத் தடுக்க விநியோகச் சங்கிலி முழுவதும் கடுமையானச் சோதனைகளையும், விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு எதிராக அமைச்சு கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதன் மூலம் நியாயமான முறையில் மானிய விலையிலான சமையல் எண்ணெய் மக்களுக்குக் கிடைப்பதை உறுதிச் செய்ய அரசு தீவிரமாகச் செயல்படுகிறது என டத்தோ அஸ்மான் அடாம் மேலும் கூறினார்.