கோலாலம்பூர், ஜூன்.29-
தலைமை நீதிபதி தெங்கு மைமூன் துவான் மாட்டின் சேவையை பிரதமர் அன்வார் இப்ராஹிம் நீட்டிக்க மறுத்தது நீதித் துறைக்குச் செய்த இரண்டகம் என மலேசிய சோசியலிஸ்ட் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன் காட்டமாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியான தெங்கு மைமூன் எந்தவொரு நிர்வாக அழுத்தத்திற்கும் பணியாமல், அச்சமின்றி நேர்மையுடன் செயல்பட்டவர் என அருட்செல்வன் பாராட்டியுள்ளார்.
முன்னாள் பிரதமர் துன் மகாதீரிடம் இருந்து அன்வார் அதிகாரத்தைப் பிடித்துக் கொள்ளும் தந்திரங்களைக் கற்றுக் கொண்டதாக அருட்செல்வன் விமர்சித்துள்ளார். அன்வார் பதவிக்கு வந்ததிலிருந்து பல ஏமாற்றங்கள் இருப்பதாகவும், தெங்கு மைமூனைத் தக்க வைக்கத் தவறியது நீதித் துறைக்குச் செய்யப்படும் இரண்டகம் எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
மக்களின் நம்பிக்கையைப் பெறும் அரசியல் என்ற அன்வாரின் முழக்கம் வெறும் வெற்றுப் பேச்சாக மாறிவிட்டதாக அருட்செல்வன் சாடியுள்ளார். தெங்கு மைமூன் வரும் ஜூலை 1ஆம் தேதி பணி ஓய்வு பெற உள்ள நிலையில், நீதித் துறை சீர்திருத்தத்திற்கான மக்களின் கடைசி நம்பிக்கை தற்போது அரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.