ஜார்ஜ்டவுன், ஜூலை.01-
அடுக்குமாடி வீடமைப்புப் பகுதியில், ஒன்பதாவது மாடியில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் கடுமையானதைத் தொடர்ந்து அண்டை வீட்டுக்காரர்கள் கொடுத்த புகாரின் பேரில் பூட்டப்பட்டிருந்த அந்த வீட்டின் கதவைத் தீயணைப்புப் படையினர் உடைத்து உள்ளே சென்று பார்த்த போது தாயும் மகளும் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஜார்ஜ்டவுன், ஜாலான் புக்கிட் கம்பீர் என்ற இடத்தில் நேற்று மாலை 4. 41 மணியளவில் தீயணைப்புப் படையினர் மேற்கொண்ட சோதனையில் 40 வயது மதிக்கத்தக்க மாது மற்றும் அவரின் 2 வயது மகள், வீட்டின் பிரதான அறையில் பிணமாகக் கிடந்தது தெரிய வந்துள்ளது.
அவ்விருவரின் சடலங்களையும் மீட்பதற்கு முன்னதாக போலீஸ் துறையின் தடயவியல் நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர். தாயும், மகளும் ஒரு வாரத்திற்கு முன்பு இறந்து இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.
மரணத்திற்கானக் காரணத்தைக் கண்டறிய அவ்விருவரின் சடலங்களும் பினாங்கு மருத்துவமனையின் சவக் கிடங்கிற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளன. முன்னதாக, அவ்விருவரின் இறப்பை போலீசார் திடீர் மரணம் என்று வகைப்படுத்தியுள்ளனர்.