புத்ராஜெயா, ஜூலை.01-
அமைதி பேரணி நடத்தப்படுவதற்கு முன்னர், அதன் ஏற்பாட்டாளர்கள், 5 நாட்களுக்கு முன்கூட்டியே அது குறித்து போலீசுக்குத் தகவல் அளிக்கத் தவறினால், அது குற்றத்தன்மையிலானது என்ற பொதுப் பேரணிச் சட்டத்தின் ஒரு பகுதியை கூட்டரசு நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.
இப்படியொரு சட்ட விதிமுறையானது அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று ஐவர் கொண்ட நீதிபதிகள் குழுவினருக்குத் தலைமையேற்ற நாட்டின் தலைமை நீதிபதி தெங்கு மைமூன் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
2012 ஆம் ஆண்டு பொது அமைதிச் சட்டத்தின் உள்ளடக்க விதி ஒன்றை மேற்கொள்காட்டி, அந்த சட்ட விதியின் கீழ் தம் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்பட்டது செல்லத்தக்கதா? என்று மூடா கட்சியின் பொதுச் செயலாளர் அமீர் ஹாடி தொடுத்த வழக்கில் மேற்கண்ட தீர்ப்பை மைமூன் வழங்கினார்.