கோலாலம்பூர், ஜூலை.01-
நாட்டின் முதலாவது பெண் தலைமை நீதிபதி என்ற முறையில் இன்று பணி ஓய்வு பெறும் துன் தெங்கு மைமூன் துவான் மாட்டிற்கு, கூட்டரசு நீதிமன்றத்தில் முழு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்பட்டது.
தெங்கு மைமூன் கட்டாயப் பணி ஓய்வு வயதை எட்டிய இன்றைய தினத்தில், கூட்டரசு நீதிமன்ற தலைமை நீதிபதி என்ற முறையில் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியபோது கூட்டரசு நீதிமன்ற நடவடிக்கைகள் உணர்ச்சிகரமாக மாறியது.
மூடா கட்சியின் பொதுச் செயலாளர் அமீர் ஹாரிரி அப்துல் ஹாடி, சவால் விட்ட அரசியலமைப்புச் சட்ட விதி தொடர்பான வழக்கில் அந்த விதி செல்லாது என்று ஐவர் கொண்ட நீதிபதிகள் குழுவினருக்குத் தலைமையேற்ற தெங்கு மைமூன், தனது அதிரடித் தீர்ப்பை வழங்கினார். நீதிபரிபாலனத் துறைக்குத் தலைமையேற்ற தெங்கு மைமூன் வழங்கிய கடைசித் தீர்ப்பும் இதுவே.
பிரியாவிடை நிகழ்வில் மலேசிய வழக்கறிஞர் மன்றத்தைப் பிரதிநிதித்து கலந்து கொண்ட அதன் துணைத் தலைவர் ஆனந்த் ராஜ், பணி ஓய்வு பெறும் தெங்கு மைமூனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மிக நெகிழ்ச்சியான பிரியாவிடை உரையை நிகழ்த்தினார்.
இன்று நாம் ஒரு தலைமை நீதிபதியின் சேவையின் முடிவைக் காண்பது மட்டுமல்லாமல், மலேசிய நீதித்துறையின் முகத்தை முற்றிலுமாக மாற்றிய ஓர் அசாதாரண மரபையும் கொண்டாடுகிறோம் என்று தெங்கு மைமூனுக்கு ஆனந்தராஜ் புகழாரம் சூட்டினார்.
தெங்கு மைமூன் நாட்டின் வரலாற்றில் முதல் பெண் தலைமை நீதிபதி மட்டுமல்ல, 1988 ஆம் ஆண்டு மலேசியா நீதித்துறை, நெருக்கடியால் களங்கப்படுத்தப்பட்ட நிலையில் நீதித்துறையின் கண்ணியத்தைக் காத்த பெருமை இவரையே சாரும் என்றார்.
தெங்கு மைமூன் நீதிபரிபாலனத்திற்கு தலைமையேற்றது மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து, காமன்வெல்த்தின் சிறந்த நீதித்துறைக்கு இணையாக நிலைநிறுத்தியுள்ளார் என்று ஆனந்த ராஜ் உணர்ச்சிவசப்பட்ட தொனியில் புகழ் மாலை சூட்டினார்.