இலக்கவியல் தொழில்நுட்பத்தின் வழி அதிகமான அடித்தட்டு மக்களுக்கு உதவி- கோபிந்த் சிங் டியோ

கோலாலம்பூர், ஜூலை.01-

இலக்கவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைத்துத் தட்டு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கும் அடித்தட்டு மக்களுக்கும் பயன் தரக்கூடியதாக இருப்பது அவசியம் என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

அடித்தட்டு மக்களுக்கும், பேரிடர்களினால் நெருக்கடிகளை எதிர்நோக்கும் மக்களுக்கும் உதவுவதோடு மட்டும் அல்லாமல், அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறவும் இந்த முன்னெடுப்பு உதவுகிறது.

சிஐஎம்பி வங்கி நிறுவனம், டிஎன்ஜி டிஜிட்டல் நிறுவனத்தோடு கைக்கோர்த்து மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இந்தத் திட்டம், நேர்மறையானத் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தொடர்ச்சியாக, இந்தத் திட்டம் மாபெரும் மாற்றங்களை உருவாக்கியிருப்பது மலேசியர்கள் மாந்தநேயத்தைப் பேணிக் காப்பது புலப்படுத்துகிறது என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.

கல்வி, பொருளாதார மேம்பாடு, இளைஞர்களுக்கான விளையாட்டுத்துறை என 3 முக்கிய அம்சங்களை உள்ளடக்கிய இந்தத் திட்டம், இலக்கவியல் தொழில்நுட்பத்தின் வழி விரிவடைந்து வருவது பெருமைக்குரியது என அமைச்சர் கூறினார். அதோடு பொருளாதாரத்தை வலுப்படுத்தும் இது போன்ற திட்டங்கள் எந்த பாகுபாடுமின்றி அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்று கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.

வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல்-இலக்கவியல் தொழில்நுட்ப உலகில் மலேசியர்களும் பங்கு கொண்டு முன்னேற இலக்கவியல் தொழில்நுட்ப அறிவு அத்தியாவசியமானது. ஆக மலேசியர்கள் இலக்கவியல் தொழிலநுட்ப அறிவைக் கொண்டிருத்தலின் அவசியத்தை அமைச்சர் கோபிந்த் சிங் வலியுறுத்தினார்.

WATCH OUR LATEST NEWS