புத்ராஜெயா, ஜூலை.01-
அரசு தரப்பு வழக்கறிஞரான துணை பப்ளிக் பிராசிகியூட்டர் டத்தோ அந்தோணி கேவின் மொராயிஸ் கொலை வழக்கில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு மருத்துவ நிபுணரான டாக்டர் ஆர். குணசேகரன் உட்பட 6 பேரின் ஆகக் கடைசியான மேல்முறையீட்டில் நால்வரின் மரணத் தண்டனை உறுதிச் செய்யப்பட்டது.
இதர இருவரின் மரணத் தண்டனை ரத்து செய்யப்பட்டு, ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. இன்று பணி ஓய்வு பெறவிருக்கும் நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட் தலைமையில் மூவர் கொண்ட
கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் குழுவினர், அந்த அறுவரின் மேல்முறையீடு தொடர்பில் இன்று பிற்பகலில் தங்கள் தீர்ப்பை வழங்கினர்.
62 வயது டாக்டர் குணசேகரன், 33 வயது ஆர். டினேஸ்வரன், 32 வயது ஏ.கே தினேஷ் குமார், 35 வயது எம். விஸ்வநாத் ஆகிய நால்வருக்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் விதித்த மரணத் தண்டனை நிலை நிறுத்தப்பட்டது.
அதே வேளையில் மரணத் தண்டனை விதிக்கப்பட்ட இதர இரண்டு நபர்களான 54 வயது எஸ். ரவிச்சந்திரன் மற்றும் 32 வயது எஸ். நிமலன் ஆகியோரின் மரணத் தண்டனையை கூட்டரசு நீதிமன்றம் ரத்து செய்தது. மாறாக, ரவிச்சந்திரனுக்கு 40 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவரின் வயதைக் கருத்தில் கொண்டு பிரம்படித் தண்டனை விதிக்கப்படவில்லை.
நிமலனுக்கு 35 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் 12 பிரம்படித் தண்டனை விதிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோலாலம்பூர் வங்சா மாஜு இராணுவ மருத்துவமனையின் முன்னாள் மருத்துவ நிபுணரான டாக்டர் குணசேகரன், தாம் செய்து கொண்ட மேல்முறையீட்டு மனுவை மீட்டுக் கொண்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை நிலைநிறுத்தப்படுவதாக தலைமை நீதிபதி தெங்கு மைமூன் தெரிவித்தார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி காலை 7 மணிக்கும் இரவு 8 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் 55 வயது கேவின் மொராயிஸைக் கடத்திச் சென்று, சுபாங் ஜெயாவில் மிகக் கொடூரமாகக் கொன்ற குற்றத்திற்காக அறுவருக்கும் ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் மரணத் தண்டனை விதித்துள்ளது.
அத்தண்டனையை கடந்த ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி, அப்பீல் நீதிமன்றம் உறுதிச் செய்தது.