சிப்பாங், ஜூலை,01-
சைபர் ஜெயா பல்கலைக்கழக மாணவி மனிஷாபிரிட் கவுர் அக்ஹாரா கொலைச் சம்பவத்தில், அவர் தங்கியிருந்த கொண்டோமினியம் விடுதிக்கு நுழைவதற்கு முக்கியச் சந்தேகப் பேர்வழியான ஆடவன், தனது காதலி தன்னிடம் ஒப்படைத்த வீட்டுச் சாவியும், எஸ்சஸ் கார்ட்டையும் பயன்படுத்தியுள்ளான் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஓமார் கான் தெரிவித்துள்ளார்.
அந்த ஆடவனின் காதலி, கொலையுண்ட மனிஷாபிரிட் கவுருடன் ஒன்றாக அந்த வீட்டில் தங்கியிருந்தப் பெண் ஆவார்.
கொலை நடப்பதற்கு முன்பு, மனிஷாபிரிட் கவுருடன் ஒன்றாக அந்த வீட்டில் தங்கியிருந்த பெண், விடுமுறையில் தனது சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். ஆனால், சொந்த ஊருக்குத் திரும்புவதற்கு முன்பு, தன்னிடம் இருந்த வீட்டுச் சாவியையும், எஸ்சஸ் கார்ட்டையும் தனது காதலனிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றுள்ளார்.
20 வயது ஃபிசியோதெராபி மாணவியான மனிஷாபிரிட் கவுர் தனிமையில் இருக்கிறார் என்பதை நன்கு உணர்ந்த அந்த ஆடவன், கடந்த ஜுன் 24 ஆம் தேதி இரவு, தன்னிடம் இருந்த வீட்டுச் சாவியையும், எஸ்சஸ் கார்ட்டையும் பயன்படுத்தி வீட்டிற்குள் நுழைந்து இருக்கிறான்.
மனிஷாபிரிட் கவுர் தங்கியிருந்த வீட்டில் அந்த ஆடவன் தீய நோக்கத்துடனே நுழைந்து இருக்கிறான். அன்றிரவு, அந்த சீக்கிய மாணவியுடன் அவன் அரட்டை அடித்துள்ளான். அதன் பின்னரே அந்தப் பெண்ணை பொருள் ஒன்றினால் அவன் தாக்கியுள்ளான் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று ஷா ஆலாமில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஹுசேன் தெரிவித்தார்.
தனது காதலி தங்கியிருந்த வீட்டின் அறையில் அந்தச் சந்தேகப் பேர்வழி ஏற்கனவே பல முறை தங்கியிருக்கிறான் என்பதால் அவனது காதலி வீட்டின் சாவியையும், எஸ்சஸ் கார்ட்டையும் அவனிடம் ஒப்படைத்துள்ளார்.
இதனை அவன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான் என்பதே இந்தக் கொலையின் பின்னணியாகும் என்று டத்தோ ஹுசேன் குறிப்பிட்டார்.
மாணவி மனிஷாபிரிட் கவுர், அன்றிரவு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்பதற்கானச் சாத்தியத்தை புலன் விசாரணை அதிகாரிகள் மறுக்கவில்லை என்றாலும், சவப் பரிசோதனையில் அந்த மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று ஹுசேன் விளக்கினார்.
அதே வேளையில் அந்த மாணவி, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதற்கான ஏதேனும் ஆதாரங்கள் உள்ளனவா என்பதைக் கண்டறிய இந்தக் கொலை தொடர்பில் தாங்கள் இன்னமும் விசாரணை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கொலைக்குப் பிறகு அந்த மாணவியின் மடிக்கணினி, கைப்பேசி மற்றும் ஏடிஎம் கார்டு உள்ளிட்ட பல பொருட்கள் சந்தேகப் பேர்வழியால் திருடப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
அந்த மாணவியின் ஏ.டி.எம். கார்ட்டைப் பயன்படுத்தி அவன் 200 ரிங்கிட்டை மீட்டுள்ளான் என்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஹுசேன் மேலும் கூறினார்.
கடந்த ஜுன் 24 ஆம் தேதி நிகழ்ந்த இந்தக் கொலை தொடர்பில் 19 க்கும் 20 க்கும் இடைப்பட்ட வயதுடைய இரண்டு பெண்களையும் ஒரு ஆணையும் போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு பெண்களில் ஒருவர், கைது செய்யப்பட்ட ஆடவனின் காதலியாவார்.
கொலை நடந்த அடுத்த 48 மணி நேரத்தில் ஜோகூர் பாரு மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள கெமென்சே ஆகிய இடங்களில் மூவரும் கைது செய்யப்பட்டதாக ஹுசேன் விளக்கினார்.