ஜோகூர் பாரு, ஜூலை.01-
டத்தோ சுகுமாறன் ராமன் தலைமைத்துவத்தின் கீழ் செயல்படும் சுல்தானா ரொகாய்யா அறவாரியப் பொறுப்பாளர்கள், ரவீன்குமார் கிருஷ்ணசாமி தலைமையிலான ஜோகூர் மஇகாவின் ஒத்துழைப்புடன் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் எஸ்பிஎம், எஸ்டிபிஎம் தேர்வுகளில் சிறந்த அடைவு நிலையைப் பெற்ற ஜோகூர் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மாணவர்களைக் கெளரவிக்கும் வகையில் மாபெரும் பாராட்டு விழாவைச் சிறப்பாக முன்னெடுத்தனர்.
கடந்த ஜுன் 29 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஜோகூர் பாரு, டேவான் தாமான் புக்கிட் இண்டா மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழா, ஜோகூர் மாநிலத்தில் அர்த்தம் பொதித்த, மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவாக அமைந்திருந்தது.
இதில் மொத்தம் 205 சிறந்த மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்குத் தலா ஆயிரம் ரிங்கிட் வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டனர்.
எஸ்பிஎம் தேர்வில் 8A க்களுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும், எஸ்டிபிஎம் தேர்வில் 4A பெற்ற மாணவர்களுக்கும் இந்த சிறப்பு செய்யப்பட்டது. இதற்காக அன்றைய தினம் மொத்தம் இரண்டு லட்சத்து 5 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்பட்டது என்று ஜோகூர் மாநில மஇகா தலைவர் கே.ரவீன்குமார் குறிப்பிட்டார்.
இந்த வெற்றிக்காகப் பாடுபட்ட அனைத்து மாணவர்களையும் வாழ்த்தவும், தங்கள் பிள்ளைகளின் வெற்றிக்குப் பின்னால் உந்து சக்தியாக இருந்த பெற்றோர்களின் சேவைகளுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்திய சமூகத்திற்கு, குறிப்பாக கல்வித் துறையில் உதவுவது என்ற சுல்தானா ரொகாய்யா அறவாரியத்தின் நோக்கத்திற்கு ஏற்ப இது போன்ற திட்டங்கள் எதிர்காலத்திலும் தொடரும் அதன் தலைவர் டத்தோ சுகுமாறன் ராமன் குறிப்பிட்டார்.
சமூகநலன்,பொருளாதாரம் மற்றும் கல்வி என மூன்று பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்கு சுல்தானா ரொகாய்யா அறவாரியம் உதவிகள் வழங்கி வந்த போதிலும் கல்விக்கு இந்த அறவாரியம் அதிக முக்கியத்துவம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த விழாவில் மஇகா தேசிய மகளிர் தலைவி சரஸ்வதி நல்லதம்பி, ஜொகூர் மாநில கல்வி இலாகாவின் தொடக்கப்பள்ளி மற்றும் பாலர் பள்ளிகளுக்கான உதவி இயக்குனர் ரவிச்சந்திரன் ராமச்சந்திரன், மாநில கல்வி இலாகாவின் இடைநிலைப் பள்ளிகளின் தமிழ்மொழிக்கான உதவி இயக்குனர் பிரகாஷ் சுவந்தரம், மஇகா தேசிய புத்ரி தலைவி தீபா சோலைமலை மற்றும் ஜொகூர் மஇகா பிரமுகர்கள், சுல்தானா ரொகாய்யா அறவாரிய பிரமுகர்கள் உட்பட சுமார் ஆயிரம் பேர் கலந்து சிறப்பித்தனர்.