ஜார்ஜ்டவுன், ஜூலை.02-
ஆடவர் ஒருவர், தனது ஹொண்டா சிட்டி ரகக் காரைச் சாலையோரத்தில் நிறுத்தி விட்டு பினாங்கு இரண்டாவது பாலத்திலிருந்து கடலில் குதித்த சம்பவம் இன்று அதிகாலையில் நிகழ்ந்துள்ளது.
பினாங்கு இரண்டாவது பாலத்தின் பத்து காவானை நோக்கி 14.0 ஆவது கிலோமீட்டரில் அதிகாலை 4.23 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அந்த ஆடவரின் கைவிடப்பட்ட கார், அவ்வழியே கடந்தவர்களால் அடையாளம் காணப்பட்டு, போலீசுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
33 வயது வோங் கா வாய் என்று அடையாளம் கூறப்பட்ட அந்த நபரைத் தேடும் பணியைத் தீயணைப்பு, மீட்புப் படை முடுக்கி விட்டுள்ளதாக பினாங்கு மாநில உதவி இயக்குநர் ஜோன் சகூன் தெரிவித்தார்.
கடல்சார் அமலாக்கப் பிரிவுடன் கூட்டாக இணைந்து பாயான் லெப்பாஸ் மற்றும் பாகான் ஜெர்மால் நிலையங்களின் தீயணைப்பு, மீட்புப் படையினர், சம்பந்தப்பட்ட கடல் பகுதியில் அந்த ஆடவரைத் தேடும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.