கிள்ளான், ஜூலை.02-
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகள் நலன்களைக் காக்கும் நோக்கில் சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகள் நடவடிக்கைக் குழுவை மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு அமைத்துள்ளார்.
நேற்று கிள்ளான், வையிந்தம் அக்மார் விடுதியில் சிலாங்கூர் மாநிலத் தமிழ்ப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மன்றத்தின் 41 ஆவது மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பாப்பா ராயுடு, மாநில தமிழ்ப்பள்ளிகளின் நலன் காக்கும் குழு அமைக்கப்பட்டதை விளக்கினார்.
இந்த மாநாட்டில் சிலாங்கூர் மாநிலம் முழுவதிலுமிருந்து 99 தேசிய வகை தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்களை வெற்றிகரமாக ஒன்றிணைத்தது, இதன் மூலம் மாநிலத்தில் தமிழ்க் கல்வியை மேம்படுத்துவதில் பள்ளி நிர்வாகிகளின் ஒருமித்த கருத்திணக்கத்தையும், உயர் அர்ப்பணிப்பையும் கொண்டுள்ளனர் என்பதை நிரூபிப்பதாக உள்ளது என்று பாப்பா ராயுடு தமது உரையில் தெரிவித்தார்.
கொள்கைகளை ஒருங்கிணைத்தல், திட்டங்களைச் செயல்படுத்துவதைக் கண்காணித்தல் மற்றும் பள்ளி அளவில் முன்முயற்சிகளை மேற்கொள்ளுதல் முதலியவற்றுக்கு இந்த சிறப்பு நடவடிக்கைக் குழு துணை நிற்கும் என்பதுடன் அதன் பொறுப்பாளர்களையும் பாப்பா ராயுடு அறிமுகப்படுத்தினார்.
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி நடவடிக்கைக் குழுவின் தலைவராக அன்பழகன் ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கி இருக்கும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண தொடர்ந்து போராடுவேன் என்று குறிப்பிட்ட பாப்பா ராயுடு, குறைந்த மாணவர்களைக் கொண்ட தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்த தலைமை ஆசிரியர்கள் பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அதே வேளையில் நமது குழந்தைகளின் கல்விச் சிறப்பை மேம்படுத்துவதில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றும் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் பாப்பா ராயுடு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மன்றத்தின் 41 ஆவது மாநாடு தலைவர் எஸ்.எஸ். பாண்டியன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.