கோலாலம்பூர், ஜூலை.02-
வேலை இழந்தவர்களுக்கு மறுபயிற்சி அளிக்கும் திட்டத்தை நடத்தியதைப் போல் பாசாங்கு செய்து, போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, 5 லட்சம் ரிங்கிட் பெற்று, சமூக பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவை ஏமாற்றிய குற்றத்திற்காக வர்த்தகர் ஒருவருக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 3 லட்சம் ரிங்கிட் அபராதம் விதித்தது.
கடந்த 2020 ஆம் ஆண்டுக்கும், 2021 ஆம் ஆண்டுக்கும் இடையில் சொக்சோவின் பெஞ்சானா கெர்ஜாயா 1.0 மற்றும் 2.0 திட்டங்களின் கீழ் பணம் கோரி, சம்பந்தப்பட்ட வர்த்தகர் உரிமைக் கோரலை நடத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குளோபல் எடுகேஷன் நெட்வோர்க் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் உரிமையாளரான 52 வயது பி. சத்தியசீலன், இந்த மோசடியை நடத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி சுஸானா ஹுசேன் முன்னிலையில் நிறுத்தப்பட்ட சத்தியசீலன் தனக்கு எதிரானக் குற்றத்தை ஒப்புக் கொண்டார். சத்தியசீலன் இக்குற்றத்தை புத்ராஜெயாவில் உள்ள சொக்சோ அலுலகத்தில் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா பரவல் காரணமாக அக்காலக் கட்டத்தில் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மறுபயிற்சி அளித்து அவர்களை வேலைக்கு சேர்க்கும் பெஞ்சானா கெர்ஜாயா திட்டத்தில் நடத்தப்படாத பயிற்சிக்கு, பயிற்சியை நடத்தியதைப் போல் பணம் கேட்டு, சத்தியசீலன் சொக்சோவை ஏமாற்றியதாகக் குற்றசசாட்டில் தெரிவிக்கப்பட்டது.