அலோர் ஸ்டார், ஜூலை.02-
பேருந்து இருக்கையில் பாதுகாப்புப் பட்டை அணியாத குற்றத்திற்காக 16 பயணிகளுக்குத் தலா 300 ரிங்கிட் அபராதம் விதிக்கும் சம்மன்கள் இன்று வெளியிடப்பட்டன. சாலை போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே, இன்று கெடா அலோர் ஸ்டாரில் விரைவு பேருந்துகளில் திடீர் சோதனை மேற்கொண்ட போது, பாதுகாப்புப் பட்டை அணியாமல் இருந்த 16 பயணிகளுக்குச் சம்மன் வழங்கப்பட்டது.
ஒன்வொரு சம்மனுக்கும் அபராதத் தொகை 300 ரிங்கிட்டாகும் என்று கெடா மாநில சாலை போக்குவரத்து இலாகாவின் இயக்குநர் ஸ்டியன் வான் லுத்தாம் தெரிவித்தார்.
ஜுலை முதல் தேதியிலிருந்து பேருந்துகளில் பயணிப்பவர்கள் கட்டாயமாக சீட் பெல்ட் எனப்படும் இருக்கையின் பாதுகாப்புப் பட்டையை அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் முதலாவது சிறப்புச் சோதனை, விரைவு பேருந்துகள் மற்றும் சுற்றுலா பேருந்துகளுக்கு எதிராக நேற்று மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பலர், சீட் பெல்ட் அணியாதற்குக் காரணம், அசௌகரியமாக உள்ளது என்று தெரிவித்துள்ளனர். எனினும் பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்கு அவர்கள் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும். இல்லையேல் 300 ரிங்கிட் அபராதத்தைச் சந்திக்க நேரிடும் என்று ஸ்டியன் லுத்தாம் நினைவுறுத்தினார்.