ஜெர்தே, ஜூலை.03-
கடந்த வாரம் சனிக்கிழமை இரவு, திரெங்கானு, பூலாவ் பெர்ஹெந்தியான் கடற்பகுதியில் படகு கவிழ்ந்து, மூன்று இந்தியர்கள் உயிரிழந்த சம்பவத்திற்குக் காரணமானவர் என்று கூறப்படும் படகோட்டி, தாம் போதைப்பொருள் உட்கொண்டிருந்த குற்றத்தை ஜெர்தே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஒப்புக் கொண்டார்.
22 வயது அஸ்ரி யாஸிட் என்ற படகோட்டி, 1952 ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
கடந்த ஜுன் 29 ஆம் தேதி காலை 10.05 மணியளவில் பெசுட் மாவட்ட போதைப்பொருள் துடைத்தொழிப்புப் பிரிவு தலைமையகத்தில் அந்த படகோட்டி, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் போதைப்பொருள் உட்கொண்டு இருந்தது உறுதிச் செய்யப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 2 ஆண்டுச் சிறை அல்லது 5 ஆயிரம் ரிங்கிட்டிற்கும் மேற்போகாத அபராதம் விதிக்க வகை செய்யும் போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அந்த படகோட்டி குற்றஞ்சாட்டப்பட்டார்.
வழக்கு வரும் செப்டம்பர் 4 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அந்த படகோட்டியை 2,500 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இரவு 10.30 மணியளவில் படகு கவிழ்ந்த இந்தத் துயரச் சம்பவத்தில் பினாங்கைச் சேர்ந்த 40 வயது S. ஆறுமுகம், அவரின் 3 வயது மகள் ஏ. சர்விகா மற்றும் அவர்களின் உறவுக்காரப் பிள்ளையான 10 வயது வி. வெண்பனி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதர இருவர் இன்னமும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.