சிரம்பான், ஜூலை.03-
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிரம்பானில் 16 வயது இளம் பெண் கடத்தப்பட்டது தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு சிரம்பான் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
31 வயது டி. சவீனா, 32 வயது டி. போகராஜ், 23 வயது பார்ஹினி, 21 வயது பிகே கோஷன் குமார் மற்றும் 23 வயது பிகே சிவஷினா ஆகியோருக்கு ஜாமீன் அனுமதிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.
சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட இந்த ஐவரையும் ஜாமீனில் அனுமதிப்பதற்கு அனுமதி மறுத்த நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து அந்த ஐவரும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
பிணைப்பணம் கோரி 16 வயது இளம் பெண் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 21 வயது நபர், கிள்ளானில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அத்துடன் பிணைப்பணத்தில் அவர் பெற்றதாக நம்பப்படும் ஒரு பகுதி ரொக்கப்பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்தக் கடத்தலில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் இந்த ஐவரையும் போலீசார் கைது செய்தனர்.