கோலாலம்பூர், ஜூலை.03-
கடந்த ஆண்டு கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியாவில் ஓர் இந்தியப் பிரஜையான மாது ஒருவர், மண் புதையுண்ட சம்பவத்தில் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து மாநகரின் அந்த மையப் பகுதியில் நிகழ்ந்த நில அமிழ்வு தொடர்பான அறிக்கை இவ்வாண்டு இறுதியில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.
தற்போது இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு வரும் வேளையில் ஆண்டு இறுதியில் அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக கூட்டரசு பிரதேசத்திற்குப் பொறுப்பேற்றுள்ள பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸலிஹா முஸ்தஃபா தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி மஸ்ஜிட் இந்தியாவில் ஏற்பட் மண் புதையுண்ட சம்பவத்தில் சாக்கடை குழியில் விழுந்த சுற்றுப் பயணியான ஓர் இந்தியப் பிரஜை 48 வயது விஜயலெட்சுமியின் உடல் கண்டுபிடிக்காமல் போனது. இவ்விவகாரமும் அந்த அறிக்கையில் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று டாக்டர் ஸலிஹா குறிப்பிட்டார்.