புத்ராஜெயா, ஜூலை.03-
திட்டமிட்டக் குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி கைது செய்யப்பட்ட கிள்ளான் டிஆர் கும்பலைச் சேர்ந்த சொஸ்மா கைதிகளில் இருவரை ஜாமீனிவில் விடுவிப்பதற்கு கூட்டரசு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
அந்த இருவரின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு, நிலுவையில் இருக்கும் அவர்களுக்கு எதிரான விசாரணை நடைபெறும் வரை ஜாமீன் அனுமதிக்கப்படுவதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினருக்குத் தலைமையேற்ற கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டான்ஸ்ரீ நளினி பத்மநாபன் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
40 வயது என். நித்தியன் மற்றும் 32 வயது எஸ். ஹேமநாதன் ஆகியோரே ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இரண்டு சொஸ்மா கைதிகள் ஆவர்.
“பிரத்தியேகமாக மருத்துவச் சிகிச்சைத் தேவைப்படும் கைதிகளைக் கவனித்துக் கொள்ளவோ அல்லது அவர்களைப் பராமரிக்கவோ சிறைச்சாலை இலாகாவினால் இயலாத நிலையில், இத்தகைய அனுமதி வழங்கப்படுவதாக நீதிபதி நளினி குறிப்பிட்டார்.
நளினியின் இந்தக் கூற்றை, இதர நீதிபதிகளான ஹனிபா ஃபரிகுல்லா ஒப்புக் கொண்டார். அபு பாக்கார் ஜாயிஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
சுங்கை பூலோ சிறைச் சாலையில் 2,500 கைதிகள் மட்டுமே அடைத்து வைத்திருக்கக்கூடிய ஆற்றலைக் கொண்டுள்ளது. ஆனால், அங்குள்ள கைதிகளின் எண்ணிக்கை 6 ஆயிரம் பேராக இருக்கும் பட்சத்தில் கடுமையாக நோய் வாய்ப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பது என்பது சிரமான ஒன்று என்பதை நீதிமன்றம் கவனத்தில் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் இந்த இரண்டு சொஸ்மா கைதிகளும் தங்களின் பூர்வாங்க குற்றச்சாட்டு வழக்கிலிருந்து தப்பிச் செல்வதற்கான நிலையில் அவர்கள் இல்லை என்று நளினி விளக்கினார்.
சொஸ்மா கைதிகளுக்கு ஜாமீன் அனுமதியில்லை என்ற போதிலும் இவ்விவகாரத்தில் நீதிபதிகள் தங்கள் விவேக முடிவு பயன்படுத்தப்படுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
சக்கர நாற்காலியில் இருக்கும் ஹேமநாதனுக்கும், நித்தியனுக்கும் இரு நபர் உத்தரவாதத்துடன் தலா 50 ஆயிரம் ரிங்கிட் ஜாமீன் அனுமதிக்கப்பட்டது. அவர்கள் தங்கள் வீட்டு வளாகங்களில் இருக்க வேண்டும். மேலும் ஒவ்வொருவருக்கும் ஒரு மின்னணு கண்காணிப்பு சாதனம் பொருத்தப்படும் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை கோலா சிலாங்கூரில் ஜெராமில் உள்ள ஒரு கடல் உணவு உணவகத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களில் இருவரும் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.