இருக்கையின் பெல்ட்டில் சிக்கல் இருந்தால் பேருந்து பயணிகள் புகார் அளிக்கலாம்

கோலாலம்பூர், ஜூலை.03-

விரைவுப் பேருந்து மற்றும் சுற்றுலாப் பேருந்து பயணிகள், தாங்கள் அமர்ந்திருக்கும் இருக்கையின் பெல்ட்டில் ஏதேனும் சிக்கல் இருந்தால், மைஜேபிஜே விண்ணப்பம் மூலம் சாலைப் போக்குவரத்துத் துறைக்கு நேரடியாகப் புகார் அளிக்கலாம்.

இதன் தொடர்பான புகாரை மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம். இருப்பினும், விசாரணையை எளிதாக்க புகார் உடன் புகைப்படம் அல்லது வீடியோ ஆதாரங்கள் மற்றும் பேருந்து பயண விவரங்களை இணைக்க வேண்டும் என கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்து இலாகாவான ஜேபிஜே இயக்குனர் ஹமிடி ஹாடாம் கூறினார்.

பயணத்தைத் தொடங்குவதற்கு முன், பயணிகள் தங்கள் இருக்கை பெல்ட்களை அணிய நினைவூட்டுவது பேருந்து ஓட்டுநர்களின் பொறுப்பு என்று அவர் கூறினார்.

பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், விரைவுப் பேருந்துகள் சம்பந்தப்பட்ட விபத்துகளில் கடுமையான காயம் அல்லது இறப்பு அபாயத்தைக் குறைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது என்று ஹமிடி ஹாடாம் விளக்கினார்.

இன்று கோம்பாக் டோல் பிளாசாவில் விரைவுப் பேருந்துகள் மற்றும் சுற்றுலாப் பேருந்துகளுக்கான சிறப்பு இருக்கை பெல்ட் சோதனை நடவடிக்கையின் போது செய்தியாளர் கூட்டத்தில் ஹமிடி ஹாடாம் கூறினார்.

WATCH OUR LATEST NEWS