புத்ராஜெயா, ஜூலை.03-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புடன் தொடர்புப்படுத்தப்பட்ட 17 கோடி ரிங்கிட் ரொக்கப் பணம் மற்றும் 70 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள தங்கக் கட்டிகளை அவரிடமிருந்து பறிப்பதற்கு நீதிமன்றத்தில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தயாராகி வருவதாக அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
17 கோடி ரொக்கப் பணமும், 16 கிலோ தங்கக் கட்டிகளும், இஸ்மாயில் சப்ரிக்கு மிக நெருக்கமான முன்னாள் அதிகாரியின் பாதுகாக்கப்பட்ட ஒரு வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்டவையாகும் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.
அந்தப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் எவ்வாறு பெறப்பட்டன என்பதற்கு முழுமையாக தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் இல்லாத நிலையில் அவற்றின் உரிமையை முன்னாள் பிரதமரிடமிருந்து பறிப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.
அதே வேளையில் இந்தப் பணம் மற்றும் தங்கக் கட்டிகள் தொடர்பாக இஸ்மாயில் சப்ரியிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவடைந்து சட்டத்துறை அலுவலகத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டது. இனி நடவடிக்கை எடுப்பதா? இல்லையா? என்பது சட்டத்துறை அலுவலகத்தின் அனுமதியைப் பொறுத்ததாகும் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.