ஓரங்கட்டப்பட்ட இந்திய சமுதாயத்திற்கு 13 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் விடியல் தேவை: சார்ல்ஸ் சந்தியாகோ தலைமையிலான குழுவினர் கோரிக்கை

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.03

பல்வேறு துறைகளில் ஓரங்கட்டப்பட்டுள்ள மலேசிய இந்திய சமுதாயத்திற்கு 13 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் விடியலை ஏற்படுத்தக்கூடிய முதன்மையானத் திட்டங்கள் தொடர்பான பரிந்துரை ஒன்று, கிள்ளான் முன்னாள் எம்.பி. சார்ல்ஸ் சந்தியாகோ தலைமையில் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

13வது மலேசியத் திட்டத்தின் கீழ் இந்திய சமூகத்தை மேம்படுத்துவதற்காக முன்மொழியப்பட்ட முன்முயற்சிகள் குறித்து விவாதிக்க இரண்டு அரசு சாரா அமைப்புகள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமைச் சந்திப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

சமூக மாற்றத்திற்கான நிலையான முயற்சி இயக்கமான எஸ்ஐசிசி மற்றும் யாயாசான் இல்திஸாம் மலேசியா ஆகிய இரு அரசு சாரா அமைப்புகள், கடந்த ஜூன் 23 ஆம் தேதி பொருளாதார அமைச்சில் இந்திய சமுதாயத்தை மேம்படுத்தும் திட்டங்கள் தொடர்பான பரிந்துரை ஒன்றை சமர்ப்பித்துள்ளதாகவும், அந்த பரிந்துரை தொடர்பில் இன்னும் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை. எனினும் சந்திப்பு தேதி கேட்டு தாங்கள் காத்திருப்பதாக சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

இன்று பெட்டாலிங் ஜெயா, ஜாலான் காசிங்கில் உள்ள ஓர் உணவகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சார்ல்ஸ் சந்தியாகோ இதனைத் தெரிவித்தார்.

இதன் தொடர்பில் அரசாங்கம் பதிலளிக்க குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை என்றாலும், பிரதமர் விரைவில் இந்தத் திட்டத்தை ஒரு பொது அறிவிப்பு மூலமாகவோ அல்லது இந்த மாதம் நாடாளுமன்றத்தில் 13 ஆவது மலேசியத் திட்டத்தைத் தாக்கல் செய்து உரையாற்றும் போது அறிவிப்பார் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக சார்ல்ஸ் குறிப்பிட்டார்.

இந்திய சமுதாயத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று அரசாங்கம் ஆராய வேண்டியதில்லை. காரணம், இந்திய சமுதாயத்திற்கு என்ன செய்ய வேண்டும், என்னனென்ன தேவை, அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதை மிகத் தெளிவாக அந்தப் பரிந்துரையில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக சார்ல்ஸ் தெரிவித்தார்.

இந்திய சமூகம் எதிர்கொள்ளும் தடைகளை அகற்றி, நிவர்த்தி செய்ய 13 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் ஐந்து அடிப்படை அம்சங்களின் கீழ் 40 முன்முயற்சிகள் மற்றும் 11 செயல் திட்டங்களை அரசு சாரா நிறுவனங்கள் முன்மொழிந்துள்ளதாக சார்ல்ஸ் குறிப்பிட்டார்.

கல்வி சீர்திருத்தங்கள், பெண்கள் மற்றும் இளைஞர் மேம்பாடு, சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கான முன்னேற்ற வாய்ப்புகள், நிறுவனச் சீர்திருத்தங்கள் மற்றும் நிர்வாகம் ஆகியவையே அந்த 5 அம்சங்களாகும்.

மகளிர், சமுதாய நலன் சார்ந்த தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் இந்திய பொது அமைப்புகளின் பொறுப்பாளர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்களுடன் கடந்த பல மாதங்களாக ஆலோசனை நடத்திய பிறகு இந்தத் திட்டங்க। வகுக்கப்பட்டன என்பதையும் சார்ல்ஸ் விளக்கினார்.

உதாரணத்திற்கு மற்ற இனத்தவர்களுடன் ஒப்பிடுகையில் இந்திய மாணவர்களிடையே “மிக அதிகமாக” பள்ளிப் படிப்பை இடைநிறுத்தும் விகிதங்களை 30% முதல் 50% வரை மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பிரச்னையைத் தீர்க்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக, அனைத்து குழந்தைகளுக்கும் பாலர் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சார்ல்ஸ குறிப்பிட்டார்.

பிரதமர் துறையின் சிறப்பு அதிகாரி சண்முகம் மூக்கனுடன் இணைந்து அரசு சார்பற்ற இயக்கங்களின் ஒத்துழைப்புடன் இந்தபி பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டதாகவும் சார்ல்ஸ் சுட்டிக் காட்டினார்.

இந்தச் செய்தியாளர்கள் கூட்டத்தில் யாயாசான் இல்திஸாம் மலேசியாவின் நிர்வாகச் செயலாளர் பவித்ரா வேலாயுதம் உட்பட அரசு சாரா இயக்கங்களின் பொறுப்பாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

WATCH OUR LATEST NEWS