ஜோகூர் பாரு, ஜூலை.04-
லோஜிஸ்திக் மற்றும் பொருள் பட்டுவாடா சேவையில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட்டை நம்பிக்கை மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் பெண் இயக்குநர் ஒருவர், ஜோகூர் பாரு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
41 வயது சஹேலா அப்துல் ரஹிம் என்ற அந்த பெண் இயக்குநர், நீதிபதி டத்தோ அஹ்மாட் கமால் அரிஃபின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
ஜோகூர் பாரு, தாமான் டாயாவில் உள்ள சாலை போக்குவரத்து இலாகாவின் அலுவலக நிறுவனத்திற்குச் சொந்தமான ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள மூன்று லோரிகள், பயன்பாட்டிலிருந்து அகற்றப்படுவதற்கு நேர்மை தவறி நடந்துள்ளார் என்று அவருக்கு எதிராகக் குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
குற்றாவளி என்று நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள அந்த பெண் இயக்குநர், குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியுள்ளார்.