பாசீர் பூத்தே, ஜூலை.04-
கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, மின்சாரத் தூணில் மோதி தடம் புரண்டதில் ஆடவர் ஒருவர் மரணமுற்றார்.
இந்தச் சம்பவம் நேற்று காலை 7 மணியளவில் கிளந்தான், பாசீர் பூத்தே அருகில் செராங் ருக்கு தேசிய இடைநிலைப்பள்ளி அருகில் ஜாலான் செராங் ருக்கு-தெலாகா பாபான் 2 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
இதில் சின்னாபின்னமான புரோட்டோன் வீரா காரைச் செலுத்திய 25 வயது நபர், சம்பவ இடத்திலே மாண்டதாக பாசீர் பூத்தே மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஸைஸுல் ரிஸால் ஸாகாரியா தெரிவித்தார்.
அந்த நபர், தெலாகா பாபானிலிருந்து செராங் ருக்குவை நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.
காரின் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய நபரின் உடலை மீட்பதற்கு தீயணைப்பு, மீட்புப் படையினரின் உதவியைப் போலீசார் நாடியதாக அவர் குறிப்பிட்டார்.
விபத்திற்கான உண்மையான காரணம் ஆராயப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.