ஜார்ஜ்டவுன், ஜூலை.04-
கடந்த மாதம், பினாங்கில் ஓர் ஆஸ்திரேலிய மாணவியைப் பாலியல் பலாத்காரம் புரிந்ததாக ஓர் இந்திய ஆடவர் ஜார்ஜ்டவுன் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
25 வயது எஸ். பிரசாந்த் என்ற அந்த ஆடவர், நீதிபதி ஜுரைடா அப்பாஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச்சாட்டு தமிழில் வாசிக்கப்பட்டது.
21 வயது ஆஸ்திரேலிய மாணவியைத் தனது பெரோடுவா அஸியா காரில் ஏற்றிய அந்த ஆடவர், காருக்குள் கத்தரிக்கோல் முனையில் அந்த மாணவியை மிரட்டி, பாலியல் பலாத்காரம் புரிந்ததாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆடவர் கடந்த ஜுன் 28 ஆம் தேதி அதிகாலை 5.20 மணியளவில் பினாங்கு, திமோர் லாவுட் மாவட்டம், ஹோங் செங் எஸ்டேட் மவுண்ட் எர்ஸ்கின் என்ற தோட்டத்தில் ஒரு சீன இடுகாடு அருகில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 30 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த இந்திய ஆடவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
எனினும் அந்த ஆடவர் தனக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதைத் தொடர்ந்து நீதிபதி தீர்ப்புத் தேதியை நிர்ணயிக்கவிருக்கிறார்.