கோலாலம்பூர், ஜூலை.04-
கனடாவிற்கு வருகை புரியும் மலேசியர்களுக்கு விசா விலக்களிப்பு வழங்குவது குறித்து அந்த நாடு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.
மக்களுக்கு இடையில் இரு தரப்பு உறவை வலுப்படுத்தும் காமன்வெல்த் நாடுகள் கொண்டுள்ள கடப்பாட்டிற்கு ஏற்ப இந்த விவகாரத்தை கனடா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
பிரான்ஸுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார், அண்மையில் கனடா பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று இருக்கும் லிபரல் கட்சியின் அபாரச் சாதனையைத் தொடர்ந்து கனடா பிரதமர் மார்க் கேமிக்கு தொலைபேசி வழி வாழ்த்துகளைத் தெரிவிக்கும் போது இவ்விவகாரத்தையும் முன்வைத்தார்.
மலேசியர்கள், கனடாவிற்கு சுற்றுலா மேற்கொள்ளளவும், படிக்கவும், வேலை செய்யவும் தற்போது விசா முறை விதிக்கப்படுகிறது.
தவிர கனடாவிற்குச் செல்ல விசா விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்கு அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன. இதனால் மலேசியர்கள் பல்வேறு அசௌகரியத்திற்கு ஆளாகின்றனர்.