கோலாலம்பூர், ஜூலை.04-
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் அடுக்குமாடி கார் நிறுத்தும் இடத்தில் நான்காவது மாடியில் அந்நிய ஆடவர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அக்கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவைப் போலீசாருக்கு வழங்கி அந்த மருத்துவமனை உதவியது.
இந்தச் சம்பவம் தொடர்பில் அன்றைய தினமே மருத்துவமனையின் நிர்வாகம், டாங் வாங்கி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளது என்று கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் இயக்குநர் டத்தோ டாக்டர் ஹரிகிருஷ்ணா கே.ஆர் நாயர் தெரிவித்துள்ளார் என்று சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சம்பவத்திற்குப் பிறகு அந்த வெளிநாட்டவர், அவசரப் பிரிவுக்குக் கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும், போலீசாரும் இது குறித்து விசாரணை செய்யத் தொடங்கியுள்ளனர் என்றும், டாக்டர் ஹரிகிருஷ்ணா தெரிவித்தாக சுகாதார அமைச்சு விளக்கம் அளித்துள்ளது.