செபராங் பிறை, ஜூலை.04-
மனித வள அமைச்சு, ஒரு மாறுப்பட்ட மனித வள அமைச்சரைப் பெற்றுள்ளது. அரசுப் பணிகள் மத்தியிலும் அடிமட்ட மக்களின் எதிர்பார்ப்பைக் கண்டறிந்து, அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதில் கருணை மிகுந்தவராகக் காணப்படுகிறார் மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம்.
பினாங்கு, செபராங் பிறை, புக்கிட் மின்ஞாக் என்ற இடத்தில் ஓட்டை ஒடிசல் நிறைந்த வீட்டில் தனது 76 வயது தாயார் மாக் எம்புனுடன் வாழ்ந்த வந்த நஸீம் ஹாஷிம், தனது தாயார் பாதுகாப்பான சூழலில் வசிக்க வேண்டும், அதற்கு தனது வீட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்பது அவரின் நீண்ட கனவாகும்.

40 வயதுடைய அந்த நபரின் கனவை நிறைவேற்றி, அவரின் தாயார் பாதுகாப்பான வீட்டில் வசிப்பதற்குரிய ஏற்பாடு செய்து, அந்த மூதாட்டிக்குத் தொடர்ந்து நல்வாழ்வு அளித்துள்ளார் அமைச்சர் ஸ்டீவன் சிம்.
தனது வீட்டை எப்படியாவது கட்டி எழுப்பிவிட வேண்டும் என்று கனவு கண்டு வந்த நஸீம், திடீரென்று பக்கவாத நோய்க்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்கு நஸீம் அனுமதிக்கப்பட்டும், ஓட்டை ஒடிசல் நிறைந்த வீட்டிற்கு அவரைக் கொண்டு வருவதற்கு அவரின் சகோதரி தயங்கினார்.

சொக்சோ சந்தாதாரரான நஸீம் நிலையைக் கேள்விப்பட்டு அவரின் வீட்டிற்கு நேரடி வருகை புரிந்த ஸ்டீவன் சிம், நோய்வாய்ப்பட்ட நஸீமை நலம் விசாரித்ததுடன், அவரின் குடும்பத்தினர் பட்ட சிறு கடனை அடைப்பதற்கு உதவியதுடன், குத்தகையாளர் ஒருவரை நியமித்து, அந்த ஆடவரின் வீட்டைப் பாதுகாப்பான சூழலில் கட்டிக் கொடுத்தார்.
தனது தாயாரைப் பாதுகாப்பான ஒரு வீட்டில் குடியிருக்க வைத்து விட்டோம் என்று நஸீம் நிம்மதி பெருமூச்சு விட்ட வேளையில் கடந்த ஜுன் 24 ஆம் தேதி அந்த ஆடவர் திடீரென்று இறந்து விட்டதாக வந்த செய்தி, அமைச்சர் ஸ்டீவன் சிம்மைத் துயரத்தில் ஆழ்த்தியது.

நேரடியாக அவரின் வீட்டிற்குச் சென்று தனது அனுதாபத்தைத் தெரிவித்துக் கொண்ட ஸ்டீவன் சிம், அந்த வயதான தாயார் எஞ்சிய காலத்தையும் சிரமின்றி கழிப்பதற்கு, இறந்து விட்ட தனது மகனின் சொக்சோ அனுகூலத்தின் வழி தொடர்ந்து மாதாந்திர நிதி உதவி கிடைப்பதற்குரிய ஏற்பாட்டை அமைச்சர் ஸ்டீவன் சிம் செய்து தந்துள்ளார்.