மக்களின் நல்வாழ்வுக்கு அவர்களின் பாதுகாப்பே முக்கியம்

ஜார்ஜ்டவுன், ஜூலை.04-

பினாங்கு மாநில மக்களின் நல்வாழ்வுக்கு அவர்களின் பாதுகாப்பே மிக முக்கியம் என்பதில் மாநில அரசாங்கம் எல்லா நிலைகளிலும் அதீத முன்னுரிமை அளித்து வருவதாக மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தெரிவித்தார்.

பினாங்கு மாநிலத்தில் அண்மையில் சில தினங்கள் நீடித்த கனத்த மழை மற்றும் புயல் காற்றில் தாமான் துன் சர்டோன் அடுக்குமாடி வீடமைப்புப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

வீடுகளின் மேற்கூரைகள் பறந்து, கடும் சேதம் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டப் பகுதிக்கு நேரடி வருகை புரிந்த டத்தோஸ்ரீ சுந்தராஜூ, அந்த வீடமைப்புப் பகுதியில் சில மாதங்களுக்கு முன்புதான் கூரைகள் மாற்றப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

பினாங்கு மாநில அரசின் இருபது எண்பது ( 20-80 ) திட்டத்தின் கீழ் அந்த வீடமைப்பப் பகுதியின் கூரைகள் சீரமைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும் இது போன்ற சேதங்கள் ஏற்படும் போது, மக்களின் பாதுகாப்பை உறுதிச் செய்வது பினாங்கு மாநில அரசின் தலையாயக் கடமையாகும். இது இயற்கை சீற்றமாக இருந்தாலும் அதற்குத் தார்மீகப் பொறுப்பேற்பது மாநில அரசின் கடமையாகும் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு விளக்கினார்.

ஶ்ரீ டெலிமா சட்டமன்ற உறுப்பினர் டான் ஹுய் பிங்கிடமிருந்து கிடைக்கப் பெற்றத் தகவலைத் தொடர்ந்து சற்றும் தாமதிக்காமல் பினாங்கு மாநில வீடமைப்புக் குழுவினருடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்த தாம், கூரைகளை மாற்றுவதற்கான ஏற்பாடுகளைத் துரித வேகத்தில் முடுக்கியதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு தெரிவித்தார்.

கடந்த ஜுன் 28ஆம் தேதி ஏற்பட்ட இந்தச் சம்பவத்தில் வீடமைப்புப் பகுதியின் பிளாக் AR மற்றும் AT பாதிக்கப்பட்டதாக டத்தோஸ்ரீ சுந்தராஜு சுட்டிக் காட்டினார்.

WATCH OUR LATEST NEWS