ஜோகூர் பாரு, ஜூலை.04-
போலீசாரின் கண்களை மறைக்கும் வகையில் வாடகை வீட்டைக் கராவோகே மையமாக மாற்றி, போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தி வந்த கும்பலை ஜோகூர் மாநில போலீசார் முறியடித்துள்ளதாக அதன் தலைவர் கமிஷனர் டத்தோ குமார் முத்துவேல் தெரிவித்தார்.
கடந்த ஜுன் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தந்திரம் அம்பலமானதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தக் கடத்தல் நடவடிக்கைக்கு மூளையாக இருந்து செயல்பட்டு வந்ததாக நம்பப்படும் 52 வயது நபர் உட்பட 4 உள்ளூர் ஆடவர்கள், ஓர் உள்ளூர் பெண், ஒரு சிங்கப்பூர் பிரஜை, 2 வியட்நாம் பெண்கள், லாவோஸைச் சேர்ந்த ஒரு பெண் ஆகியோர் இதில் கைது செய்யப்பட்டதாக டத்தோ குமார் விளக்கினார்.
இந்தக் கும்பல் பிடிபட்டது மூலம் மொத்தம் 17 லட்சம் ரிங்கிட் பெறுமானமுள்ள பல வகையான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக ஜோகூர் பாருவில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ குமார் இதனைத் தெரிவித்தார்.