சிண்டிகேட் வாயிலாக ஆள் கொண்டு வருவதைத் தவிர்ப்பீர்

பெட்டாலிங் ஜெயா, ஜூலை.04-

வங்காளதேசத்திலிருந்து சிண்டிகேட் கும்பல் மூலமாக தொழிலாளர்கள் தருவிக்கப்படும் முறையை மலேசியா நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கிள்ளான் முன்னாள் எம்.பி. சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

தங்கள் நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பதில் சிண்டிகேட் கும்பலை இடைத் தரகராகப் பயன்படுத்த வேண்டாம் என்று வங்காளதேசம் விடுத்துள்ள கோரிக்கையை மலேசியா கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

தங்கள் பிரஜைகள், மலேசியாவிற்கு வேலைக்குச் செல்வதைத் தற்காலிகமாகத் தடை விதிக்கக்கூடும் என்று வெளிநாட்டில் வேலை செய்து வரும் வங்காளதேசப் பிரஜைகள் நலன்சார்ந்த அமைச்சின் ஆலோசகர் அசிஃப் நஸ்ருல் அண்மையில் நினைவுறுத்தியிருந்தார்.

வங்காளதேசத் தொழிலாளர்களுக்கு மலேசியாவில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தருவதற்கு இந்த சிண்டிகேட்டுக்கு, தலா ஒரு தொழிலாளி 20 ஆயிரம் ரிங்கிட் முதல் 30 ஆயிரம் ரிங்கிட் வரை செலுத்த வேண்டியிருக்கிறது.

இதனால், அந்த வங்காளதேசத் தொழிலாளர்கள் மலேசியாவில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே கடனில் தள்ளப்படுகின்றனர் என்று ஆசியான் மனித உரிமைகளுக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் இணைத் தலைவரான சார்ல்ஸ் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS