கோலாலம்பூர், ஜூலை.04-
தம்முடைய சேவை மையம் மூடப்பட்டு இருக்கிறது என்று தெரிந்திருந்தும், ஒரு கோரிக்கை கடிதத்தைச் சமர்ப்பிப்பதற்கு சுங்கை பூலோ பாஸ் கட்சித் தலைவர் ஸஹாருடின் முகமட் தமது அலுவலகத்திற்கு வந்திருப்பது, தவறான எண்ணங்களை உருவாக்கும் நோக்கிலேயே அவ்வாறு செய்துள்ளார் என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் குற்றஞ்சாட்டினார்.
தமது தாத்தாவின் மறைவையொட்டி கடந்த ஜுலை 3 ஆம் தேதி சேவை மையத்தில் உள்ள அனைத்துப் பணியாளர்களும் இறுதி மரியாதை செலுத்தச் சென்றதால் அலுவலகத்தை மூட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அலுவலகம் மூடப்படுவது குறித்து முன் கூட்டியே தெரிவிக்கும் வகையில் அலுவலகத்தின் பிரதான வாசலில் அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது என்று ஸ்டீவன் சிம் விளக்கினார்.
உண்மையிலே இனம், மதம் அல்லது அரசியல் கட்சிப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் தனது அலுவலகத்திற்கு வருகை தரும் அனைத்து தரப்பினரையும் தாம் வரவேற்பதாக ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.
பாஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட உதவிக் கேட்டு தமது அலுவலகத்திற்கு வந்திருப்பதையும் ஸ்டீவன் சிம் நினைவு கூர்ந்தார்.
ஆனால், கேள்விக்குரிய விஷயம் என்னவென்றால் அந்த பாஸ் தலைவர் பிற்பகல் 3.30 மணிக்கும் பின்னர் மாலை 5.15 மணிக்கும் வந்ததாகக் கூறினார்.
எனது அலுவலகம் திறக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார். அலுவலகம் திறக்கப்படவில்லை என்றால் எனது சேவை மையம் செயல்படவில்லை என்ற ஒரு தவறான எண்ணத்தை உருவாக்கவே அந்த பாஸ் தலைவர் முயற்சித்துள்ளார் என்று ஸ்டீவன் சிம் விளக்கினார்.
அலுவலகத்திற்கு முன் அறிவிப்பு ஒட்டுப்பட்டு இருந்தும் அந்த பாஸ் தலைவர் கேள்வி எழுப்புகிறார் என்றால் ஒன்று அவருக்கு மலாய் படிக்கத் தெரியாமல் இருந்து இருக்கலாம். அல்லது தமக்கு எதிராகத் தவறான கருத்தை உண்டு பண்ணவே அவர் அவ்வாறு செய்து இருக்கலாம் என்று ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.