கோலாலம்பூர், ஜூலை.04-
வரும் ஜுலை 8 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை கோலாலம்பூர் சிட்டி செண்டரில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்களுக்கான ஆசியான் மாநாடு நடைபெறுகிறது.
இதனையொட்டி கிள்ளான் பள்ளத்தாக்கில் மூன்று நெடுஞ்சாலைகள் மற்றும் 15 பிரதானச் சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து கோலாலம்பூர், மற்றும் கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் வெளிநாட்டுப் பேராளர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக அப்பகுதிகளில் உள்ள பிரதானச் சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும். பரீட்சார்த்த செயல்முறைகள் இன்று தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.