ஜித்ரா, ஜூலை.05-
போலீசாருக்கும், சந்தேகப் பேர்வழிகளுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சண்டையில் இரண்டு குற்றவாளிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
இச்சம்பவம் இன்று காலை 8 மணியளவில் கெடா, ஜித்ரா வட்டாரத்தில் நிகழ்ந்தது. பண்டார் டாருல் அமான் அருகில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் வெளியேறும் பகுதியில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் இரண்டு குற்றவாளிகள் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக கெடா மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஃபிசோல் சால்லே தெரிவித்தார்.
ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார், சந்தேகத்திற்கு இடமாக சென்று கொண்டு இருந்த ஒரு ஃபோர் வீல் டிரைவ் வாகனத்தைத் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். எனினும் போலீசாரின் உத்தரவைப் பொருட்படுத்தாமல் சென்ற அவர்களைப் போலீசார் பின் தொடர்ந்து சென்றனர்.
அப்போது அவ்விரு குற்றவாளிகளும் போலீசாரை நோக்கித் துப்பாக்கிச் சூட்டை நடத்தினர். போலீசார் பதிலடித் தாக்குதலை நடத்திய போது இரு குற்றவாளிகளும் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டதாக டத்தோ ஃபிசோல் சால்லே தெரிவித்தார்.
அந்த நபர்களின் வாகனத்தைச் சோதனையிட்ட போது, ரிவோல்வர் கைத்துப்பாக்கிகள், ஆட்டோமெட்டிக் கைத்துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
தவிர தங்களின் குற்றச்செயல்களுக்கு அவர்கள் பயன்படுத்தியதாக நம்பப்படும் ஒரு பாராங்கும், மேலும் சில பொருட்களும் கைப்பற்றப்பட்டன என்று அலோர் ஸ்டாரில் இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோ ஃபிசோல் சால்லே இதனைத் தெரிவித்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து போதைப்பொருள் கடத்தல், குண்டர் கும்பல் ஈடுபாடு, தொழிற்சாலைகளில் நுழைந்து கொள்ளையடித்தல் முதலிய குற்றங்களை இவ்விருவரும் புரிந்துள்ளனர் என்பது பூர்வாங்க விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று டத்தோ ஃபிசோல் சால்லே விளக்கினார்.
இரு நபர்களில் 41 வயதுடைய நபருக்கு 40 குற்றப்பதிவுகள் இருக்கும் வேளையில் மற்றொரு நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை.
இருவரின் சடலங்களும் அலோர் ஸ்டார், சுல்தானா பஹியா மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக டத்தோ ஃபிசோல் சால்லே தெரிவித்தார்.