ஷா ஆலாம், ஜூலை.05-
சிறார்களை இலக்காகக் கொண்டு, பாலியல் பலாத்கார மற்றும் ஓரினப்புணச்சி செயலில் ஈடுபட்டு வந்ததாக நம்பப்படும் பாகிஸ்தான் ஆடவர் ஒருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருவதாக ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
ஷா ஆலாம் வட்டாரத்தில் செக்ஷன் 27 மற்றும் செக்ஷன் 28 ஆகிய பகுதிகளில் சிறார்களைப் பாலியல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக அந்த பாகிஸ்தான் ஆடவருக்கு எதிராகப் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சம்பவங்களில் அனைத்திலும் ஒரே நபர் ஈடுபட்டுள்ளார் என்பதற்கு புகார்களில் விவரிக்கப்பட்ட சம்பவங்கள், ஒரே மாதிரியாக இருப்பதாக ஏசிபி இக்பால் தெரிவித்தார்.
பரிதாபமான நிலையில் உதவிக் கேட்பதைப் போல் நடித்து, சிறார்களை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று அந்த நபர் தனது காமச் சேட்டையைப் புரிந்துள்ளார் என்று ஏசிபி இக்பால் விவரித்தார்.