கோலாலம்பூர், ஜூலை.05-
உணவு மற்றும் பானங்கள் தொழில்துறையில் நிலவி வரும் தொழிலாளர் பற்றாக்குறைப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு அந்நியத் தொழிலாளர்களைத் தருவிக்கும் நடைமுறையை அரசாங்கம் அவசரமாகத் திறந்து விட வேண்டும் என்று பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை தரும் ஆண்டாகும். அதற்கு முன்னதாக, தொழிலாளர் பற்றாக்குறையினால் உணவகத் துறையினர் மிகுந்த அழுத்தத்தை எதிர்நோக்கி வருகின்றனர் என்று மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் டத்தோ ஜே. கோவிந்தசாமி என்ற சுரேஷ் தெரிவித்துள்ளார்.
பிரிமாஸ் தலைவர் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான உணவகங்களின் பிரதிநிதி என்ற முறையில், உணவகத் துறையில் தொடர்ந்து நிலவி வரும் தொழிலாாளர் பற்றாக்குறை உண்மையிலேயே தமக்கு கவலை அளிக்கிறது என்று டத்தோ சுரேஷ் குறிப்பிட்டார்.