கோலாலம்பூர், ஜூலை.06-
மலேசிய கால்பந்து உலகின் பழம் பெரும் கோல்கீப்பரும், பினாங்கு அணியின் முன்னாள் வீரருமான ஃபிரோஸ் முகமட், நேற்று இரவு 10:15 மணியளவில் மாரடைப்பால் காலமானார். மஞ்சோங் நகராட்சி மைதானத்தில் நடைபெற்ற டாக்டர் ஸம்ரி அப்துல் காடீர் கோப்பைக்கான பினாங்கு, கெடா ஆகிய அணிகளின் முன்னாள் வீரர்கள் களமிறங்கிய லெஜண்ட்ஸ் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென சரிந்து விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் அங்கிருந்த சக வீரர்களிடையேயும் ஆதரவாளர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மஞ்சோங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 90களில் பினாங்கு ஹரிமாவ் கும்பாங் அணிக்காக விளையாடிப் பெரும் புகழ் பெற்ற ஃபிரோஸ் முகமட்டின் மறைவு மலேசிய கால்பந்து உலகிற்குப் பேரிழப்பாகும்.