30க்கும் மேற்பட்ட குற்றப் பதிவுகள் கொண்ட கொள்ளையன் சுட்டுக் கொலை

சுங்கை பட்டாணி, ஜூலை.06-

கெடா, பண்டார் புத்ரி ஜெயாவில் நேற்று இரவு காவல் துறையினருக்கும் குற்றவாளிக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், 30க்கும் மேற்பட்ட குற்றப் பதிவுகளைக் கொண்ட 34 வயது கொள்ளையன் சுட்டுக் கொல்லப்பட்டான். நேற்று காலை பண்டார் டாருல் அமான் பகுதியில் நடந்த மற்றொரு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சுட்டு வீழத்தப்பட்ட இருவருக்கும் அவர்கள் தொடர்புடையவர்கள் எனக் கூறினார் புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இடைக்கால இயக்குநர் டத்தோ ஃபாடில் மர்சுஸ்.

சுட்டு வீழ்த்தப்பட்டவர், தீபகற்ப மலேசியாவில் நடந்த பல ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையக் கும்பலின் தலைவர் என்றும், இக்கும்பல் 2022 முதல் நகைக் கடைகளிலும் தொழிற்சாலைகளிலும் 6 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேல் கொள்ளையடித்துள்ளதாகவும் ஃபாடில் மர்சுஸ் தெரிவித்தார். இந்தச் சம்பவம் தொடர்பில் ஒரு துப்பாக்கியும் பிற தடயப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் பல கைதுகளும் தேடுதல் நடவடிக்கைகளும் விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுட்டு வீழ்த்தப்பட்டவரில் ஒருவரின் மனைவியைத் தற்பொழுது காவல் துறை தடுத்து வைத்துள்ளதாக கோல மூடா மாவட்டக் காவல் துறைத் தலைவர் அசிஸ்டன் கமிஷனர் ஹன்யான் ரம்லான் தெரிவித்துள்ளார். மேலும், அவரது வீட்டில் இருந்து ஒரு கைத்துப்பாக்கியும் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 20 வயதுமிக்க அந்தப் பெண்மணியின் தடுப்புக் காவல் வரும் ஜூலை 12 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு நீடிக்கும் என ஹன்யான் ரம்லான் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS