விமானத்தில் திடீர் தீ எச்சரிக்கை அலாரம்: பதற்றத்தில் குதித்த பயணிகள்

மாட்ரிட், ஜூலை.06-

ஸ்பெயினில் ரியானேர் விமானத்தில் திடீரென தீ எச்சரிக்கை எழுப்பப்பட்டதால் பயணிகள் பீதியில் இறக்கையில் இருந்து குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானம் ஸ்பெயினின் பால்மா டி மல்லோர்கா விமான நிலையத்தில் இருந்து மான்செஸ்டருக்கு புறப்படவிருந்தது. வழக்கமானப் புறப்படும் நடைமுறையின் போது ஏற்பட்ட இச்சம்பவத்தால், பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதில் சிலர் விமானத்தின் இறக்கைகளில் இருந்து குதித்ததால் சிறிய காயங்களுக்கு ஆளானார்கள்.

விமானம் புறப்படத் தயாரான போது திடீரென தீ எச்சரிக்கை ஒலித்தது. இதனால் பயணிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. பீதியில் அலறிய பயணிகளை கண்ட விமான ஊழியர்கள் உடனடியாக அவசரகால நடைமுறைகளைத் தொடங்கினர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து, அவசரகால கதவுகள் வழியாக பயணிகளை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால், குழப்பம் மற்றும் பயத்தின் காரணமாக, சில பயணிகள் விமானக் குழுவினரின் அறிவுறுத்தல்களைப் புறக்கணித்தனர். இதில் சிலர் விமானத்தின் இறக்கைகளில் ஏறி அதிலிருந்து குதித்தனர். இதனால் சுமார் 18 பேருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. இந்த பதற்றமான சூழ்நிலையின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகின்றன.

ரியானேர் விமான நிறுவனம் பின்னர் வெளியிட்ட வீடியோவில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே அலாரம் ஒலித்ததாகவும், விமானத்திற்கோ அல்லது பயணிகளுக்கோ எந்தவிதமான ஆபத்தும் இல்லை எனவும் தெளிவுபடுத்தியது.

WATCH OUR LATEST NEWS