கோத்தா கெமுனிங், ஜூலை.06-
கோத்தா கெமுனிங் மாநில சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் நடத்திய எஸ்பிஎம் 2024 சிறப்பு விருது வழங்கும் விழா இன்று கோத்தா கெமுனிங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் 8 Aக்களுக்கும் மேல் பெற்று சிறந்த தேர்ச்சியைப் பதிவு செய்த 159 மாணவர்கள் சிறப்பிக்கப்பட்டனர். மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என அனைவரும் ஒன்று கூடி, வெற்றியைக் கொண்டாடினர். சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் கற்றல் துறையின் மூத்த உதவி இயக்குநர் அசிலாவதி பிந்தி அபு பக்கர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கல்வி என்பது வெறும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல, ஒரு முன்னேற்றகரமான சமூகத்தையும் போட்டித்தன்மை கொண்ட நாட்டையும் உருவாக்குவதற்கான அடிப்படை என கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தினார். சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் கல்வி வளர்ச்சியை அங்கீகரிக்கும் வகையில், மொத்தம் 38 ஆயிரத்து 400 ரிங்கிட் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
12 A பெற்ற ஒரு மாணவருக்கு 400 ரிங்கிட்டும், 11 A பெற்ற 6 மாணவர்களுக்குத் தலா 350 ரிங்கிட்டும், 10 A பெற்ற 22 மாணவர்களுக்குத் தலா 300 ரிங்கிட்டும், 9 A பெற்ற 66 மாணவர்களுக்குத் தலா 250 ரிங்கிட்டும், 8 A பெற்ற 64 மாணவர்களுக்குத் தலா 200 ரிங்கிட்டும் வழங்கப்பட்டது.
கடின உழைப்பால் சாதித்த தனது சொந்த அனுபவங்களையும் பிரகாஷ் பகிர்ந்து கொண்டார். கல்விதான் தனக்கு பல புதிய வாய்ப்புகளைத் திறந்துவிட்டது என்றும், பெற்றோர்களின் ஆதரவையும் ஆசிரியர்களின் பங்களிப்பையும் ஒரு போதும் மறக்கக்கூடாது என்றும் அவர் மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த விழா, இளம் தலைமுறையினர் நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்த நம்பிக்கையையும், ஆதரவையும் வழங்கும் ஓர் அடையாளமாக அமைந்தது.