ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

சிரம்பான், ஜூலை.07-

சிரம்பான், சுங்கை காடுட், தாமான் துவாங்கு ஜஃபாரில் வீற்றிருக்கும் ஸ்ரீ ஆதி பெரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழா, நேற்று ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

நேற்றைய விழாவில் இந்து ஆலயங்கள், இந்து அமைப்புகளின் ஒருங்கிணைப்புப் பேரவையான மஹிமாவின் தலைவரும், கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலருமான டத்தோ என். சிவகுமார் சிறப்பு வருகை புரிந்தார்.

இந்த வருடாந்திர மஹோற்சவப் பெருவிழாவிற்குத் தலைமையேற்று வழி நடத்தி வரும் தமிழகம், திருக்கயிலாய பரம்பரை ஶ்ரீ கந்த பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஶ்ரீ கார்யம் வாமதேவ ஶ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள், தேவஸ்தானம் சார்பில் டத்தோ சிவகுமாருக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி, தலைப்பாகைக் கிரீடம் அணிவித்து சிறப்புச் செய்தார்.

தேவஸ்தானத்தின் வருடாந்திர மஹோற்சவப் பெருவிழாவையொட்டி, இன்று திங்கட்கிழமை காலையில் ஆலயத்தில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு பிச்சாண்டீஸ்வரர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

உலகத்துக்கு படியளக்கக்கூடிய பிச்சாண்டீஸ்வரர் பெருமான் வீதி உலா எழுந்தருளினார். இன்று மாலையில் திருக்கல்யாண உற்சவத்துடன் மங்களம் தரக்கூடிய திருக்கல்யாண விழா, வெகுச் சிறப்பாக நடைபெறவிருகிறது.

இந்த திருக்கல்யாண உற்சவ விழாவில் பக்தப் பெருமக்கள், அடியார்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு, ஸ்ரீ மகா இராஜராஜேஸ்வரர் அருளாசியைப்ப் பெறுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொள்கிறது.

WATCH OUR LATEST NEWS