ரியோ டி ஜெனய்ரோ, ஜூலை.07-
இந்தியாவின் தொழில்நுட்பக் கழகத்தின் வளாகத்தை மலேசியாவில் நிறுவுவது குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
IIT எனப்படும் தொழில்நுட்பக் கழகம், இந்தியாவின் தலையாயத் தொழில்நுட்ப பயிற்சிக் கழகமாக அங்கீரிக்கப்பட்டுள்ளது.
கலாச்சாரம், சுற்றுலா மற்றும் கல்வி ஆகியவற்றில் மலேசியாவும், இந்தியாவும் கொண்டுள்ள ஒத்துழைப்பு மூலம் இந்த உயர் கல்விக்கூடத்தை மலேசியாவில் நிறுவுவது வாயிலாக இரு நாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வலுப்படுத்த முடியும் என்று டத்தோஸ்ரீ அன்வார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வாரின் இந்த கோரிக்கையைத் தொடர்ந்து மலேசியாவின் எதிர்காலத்தை மையமாகக் கொண்டு டிஜிட்டல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவான AI, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் விண்வெளி ஆராய்ச்சி முதலியவற்றில் மலேசியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் குறித்து இந்தியா ஆராய்ந்து வருவதாக பிரதமர் அன்வாரிடம், இந்திய பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனெய்ரோவில் நடைபெற்று வரும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா முதலிய நாடுகள் சம்பந்தப்பட்ட 17 ஆவது BRICS உச்சநிலை மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியுடன் நடத்தப்பபட்ட சந்திப்பில் அன்வார் இதனைத் தெரிவித்துள்ளார்.