ஜித்ரா, ஜூலை.07-
கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அறுவர், காருக்குள் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கெடா, ஜித்ரா அருகில் சுங்கை கோரோக் என்ற இடத்தில் அந்த அறுவர் காருக்குள் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
ஓர் ஆண், ஒரு பெண் மற்றும் மூன்று சிறார்கள், ஒரு கைக்குழந்தை ஆகியோர் பிணமாகக் கிடந்ததாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.
ஆற்றில் விழுந்து கிடந்த ஒரு வாகனத்தைப் பொதுமக்கள் சோதனையிட்ட போது, அறுவர் உயிரிழந்த சம்பவம் தெரிய வந்தது.
சடலங்களை அகற்றும் பணி இன்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. சம்பந்தப்பட்டவர்கள் கெடா, ஜெர்லினைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த சனிக்கிழமை வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை என்று அவர்களின் குடும்பத்தினர் போலீசில் புகார் செய்து இருந்தனர்.