கோலாலம்பூர், ஜூலை.07-
நாட்டின் தலைமை நீதிபதி நியமனத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு அரச விசாரணைஆணையம் அமைக்கப்பட்ட வேண்டும் என்று பிகேஆர் கட்சியின் 9 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நாட்டின் நீதி பரிபாலனம், ஒரு சுயேட்சை அமைப்பாக, சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய நிலையில் அதன் முக்கியப் பதவிகளை நியமிப்பதில் சில தலையீடுகள் இருப்பதாகக் கூறப்படுவது, பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் தொடர்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மெளனம் காப்பதிலிருந்து விலகி , நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் பொருளாதார அமைச்சரும், பிகேஆர் கட்சியின் முன்னாள் துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி தலைமையில் இன்று காலையில் பூச்சோங் ஜெயாவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஆண்டு, நாட்டின் நீதிபதிகள் நியமனத்தில் தலையீடு செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னணி வழக்கறிஞர் வி.கே. லிங்கத்தைப் போன்று மீண்டும் ஒரு சம்பவம் நீதித்துறையில் ஏற்பட்டு விடாமல் இருக்க இது குறித்து அரச விசாரணை ஆணையம் அமைக்கப்படுவது அவசியமாகும் என்று ரஃபிஸி குறிப்பிட்டார்.
நீதி பரிபாலனத் துறையில் யார் யார் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும், யாருக்கு பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி துன் அஹ்மாட் ஃபைருஸ் அப்துல் ஹாலிமுடன் வழக்கறிஞர் வி.கே. லிங்கம் பேசிக் கொண்டு இருந்த தொலைபேசி உரையாடல் கசிந்ததைத் தொடர்ந்து அது குறித்து விசாரிக்க அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஆளும் பாரிசான் நேஷனல் அரசாங்கம், நான்கு மாநிலங்களை இழந்ததற்கு, தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்க்கட்சியினர், வி.கே. லிங்கத்தின் ரகசியத் தொலைபேசி உரையாடலை ஆயுதமாக எடுத்தனர்.
அது போன்ற ஒரு நெருக்கடி மீண்டும் நீதித் துறையில் நடந்து விடாமல் இருக்க , தலைமை நீதிபதிகள் நியமனத்தில் அரசியல் தலையீடு இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் அரச விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று ரஃபிஸி வலியுறுத்தினார்.