மலாக்கா, ஜூலை.07-
ஒரு மாற்றுத் திறனாளியான தங்களின் 9 வயது மகள் இறக்கும் அளவிற்கு அடித்துச் சித்ரவதை செய்து வந்ததாக நம்பப்படும் ஒரு தம்பதியர், மலாக்கா, ஆயர் குரோ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டனர்.
சபாவைச் சேர்ந்தவரான 36 வயது மானுவல் பெங்காவாட், அவரின் இந்தோனேசிய மனைவியான 40 வயது ஏஸ்தா மாசா பெங்காலா என்ற பெண்ணும், நீதிபதி ரொஹாதுல் அக்மார் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த ஜுன் 23 ஆம் தேதி மலாக்கா, தாமான் கோத்தா லக்சாமானாவில் உள்ள தங்கள் வீட்டில் அந்த மாற்றுத் திறனாளிப் பெண்ணை அடித்துச் சித்ரவதை செய்து வந்ததாக அந்த தம்பதியர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடியபட்சம் 20 ஆண்டு சிறை மற்றும் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அவ்விருவரும் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.