ஷா ஆலாம், ஜூலை.07-
சிலாங்கூர் மாநிலத்தில் 1,020 மாணவர்கள் விரக்தியின் விளிம்பில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக மாநில சட்டமன்றக் கூட்டத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
யாரிடமும் பழகாமல் தனிமையைத் தேர்வு செய்து, விரக்தியுடன் அந்த மாணவர்கள் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக மாநில பொது சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்டுள்ள இந்த 1,020 மாணவர்களின் பாதுகாப்பு, இடருக்கு உரியது என்றும், அவர்களுக்கு மன நல சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில பள்ளிகளில் சந்தேகத்திற்கு இடமாக அடையாளம் காணப்பட்ட 36 ஆயிரத்து 428 மாணவர்களுக்குச் சுகாதாரப் பரிசோதனை நடத்தப்பட்டதில் 1,020 மாணவர்கள் அல்லது 2.8 விழுக்காடு மாணவர்கள் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டு, விரக்தியின் விளிம்பில் இருப்பது தெரிய வந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.