செராஸ் தமிழ்ப்பள்ளிக்குக் காத்திருக்கும் ஆபத்து: 42 மாடி ஆடம்பர வீடமைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது

கோலாலம்பூர், ஜூலை.07-

கோலாலம்பூர் மாநகரின் மையப் பகுதியில் வீற்றிருக்கும் பழமை வாய்ந்த செராஸ் தமிழ்ப்பள்ளிக்கு அருகாமையில் கட்டப்படவிருக்கும் 42 மாடி ஆடம்பர வீடமைப்புத் திட்டம், பள்ளிக்கும், மாணவர்களுக்கும் மிகப் பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்று பள்ளிப் பொறுப்பாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஒரு பொருத்தமற்ற இடத்தில் கட்டப்படும் இந்தக் கட்டடத்தினால் பள்ளி, பல்வேறு நெருக்கடியையும், ஆபத்தையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று செராஸ் தமிழ்ப்பள்ளி பள்ளி மேலாளர் வாரியம் மற்றும் பள்ளி பெற்றோர், ஆசிரியர் சங்கம் தங்கள் கவலையைத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அப்பகுதியில் 42 மாடி கட்டடம் கட்டப்படுவதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து பள்ளியின் நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் இன்று காலையில் ஆட்சேப மறியலில் ஈடுபட்டனர்.

அந்த உயர்ந்தக் கட்டடம் கட்டப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி, பள்ளி பெற்றோர்கள் பல்வேறு சுலோக அட்டைகளை ஏந்திய வண்ணம் அமைதி மறியலில் இறங்கினர்.

பள்ளி நிர்வாகம் அல்லது உள்ளூர் மக்களுடன் கலந்து ஆலோசிக்காமல் 42 மாடி கட்டடம் கட்டப்படுவதற்கு கோலாலம்பூர் மாநகர் மன்றம் எவ்வாறு அனுமதி அளித்தது என்று அவர்கள் கேள்வி எழுப்பினர்.

மக்கள் தங்களின் ஆட்சேபத்தைத் தெரிவிப்பதற்கு ஏதுவாக விளம்பரப் பலகை எதுவுமின்றி திடுதிப்பென்று 42 மாடிகளைக் கொண்ட ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புத் திட்டத்தைக் கட்டுவதற்கு முழு வீச்சாக கட்டுமானப் பணியைத் தொடங்கியிருப்பது செராஸ் தமிழ்ப்பள்ளிக்கு ஏற்படுத்தப்படும் மிகப் பெரிய ஆபத்தாகும் என்று பள்ளி மேலாளர் வாரியத்தின் தலைவர் குமார் வீரன் தெரிவித்தார்.

பொதுமக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் நிர்மாணிக்கப்படுவதற்குத் தாங்கள் எதிர்ப்பாளர்கள் அல்ல. ஆனால், பள்ளிக்கும், மாணவர்களுக்கும் பாதுகாப்புக்கு மிரட்டலை ஏற்படுத்தகூடிய இந்தத் திட்டத்தைத் தாங்கள் முழு வீச்சில் எதிர்ப்பதாக குமார் குறிப்பிட்டார்.

ஏற்கனவே பள்ளியின் இடது பக்கத்தில் 10 மாடிக் கட்டடம் கட்டப்பட்டதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பின்னர் பள்ளியின் பின்னால் 18 மாடிக் கட்டடம் கட்டப்படுவதற்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், தற்போது பள்ளியின் முன்புறம் 42 மாடிக் கட்டடம் கட்டப்படுமானால் பள்ளி முழுமையாக மறைக்கப்பட்டு, இருள் சூழ்ந்த நிலையில் இருக்கும். இது மாணவர்களின் பாதுகாப்பிற்கு, சுகாதாரச் சூழலுக்கும் பெரும் மிரட்டலை ஏற்படுத்தக்கூடியதாகும் என்று குமார் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்திற்கு மிக ரகசியமான முறையில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் எவ்வாறு அனுமதி கொடுத்தது என்றும் அவர் வினவினார். இவ்விவகாரம் தொடர்பாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யப்பட்டும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதே வேளையில் இது தொடர்பாக அமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டும், இதுவரையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குமார் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

பள்ளியின் முன்புறம் இக்கட்டடம் முதலில் 15 மாடி என்றும் பின்னர் 24 மாடி என்றும் தற்போது 42 மாடி என்றும் கூறிக் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்பதைத் தெரிவிக்கவே இன்று பெற்றோர்கள் ஒன்றிணைந்து ஆட்சேப மறியலில் ஈடுபட்டுள்ளோம் என்று குமார் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS