தாய்லாந்து சீ போட்டிக்கான மலேசிய அணியின் தலைவர் நூருல் ஹூடா

கோலாலம்பூர், ஜூலை.07-

டிசம்பர் 9 முதல் 20 வரை நடைபெறவிருக்கும் 2025 தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டிகளுக்கான மலேசிய அணியின் தலைவராக தேசிய நீச்சல் ஜாம்பவான் நூருல் ஹுடா அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார். நூருல் ஹுடாவுக்கு தடகளம் மற்றும் ஹாக்கியில் அனுபவம் வாய்ந்த இரண்டு முன்னாள் விளையாட்டு வீரர்கள், நஸ்மிசான் முகமட் மற்றும் ஜீவன் மோகன் ஆகியோர் துணைத் தலைவர்களாக உதவுவார்கள். 
 
தற்போது மலேசிய ஒலிம்பிக் மன்றத்தின் துணைத் தலைவர் பதவியை வகிக்கும் நூருல் ஹுடாவுக்கு உதவியாக மலேசிய பேட்மிண்டன் சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ கென்னி கோவும் இருக்கிறார். 
 
தாய்லாந்தில் தேசிய அணியின் வெற்றியை உறுதிச் செய்வதற்காக இக்குழுவினர் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு மற்றும் தேசிய விளையாட்டு மன்றம் ஆகியவற்றுடன் இணைந்து தேர்வு செய்யப்பட்டதாக எம்ஓஎம் இன்று ஒரு அறிக்கையில் அறிவித்தது.

நூருல் ஹுடா 1985 மற்றும் 1989 க்கு இடையில் சீ விளையாட்டுப் போட்டிகளில் 32 பதக்கங்களை (22 தங்கம், எட்டு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலம்) வென்று நாட்டின் மிகவும் வெற்றிகரமான பெண் நீச்சல் வீராங்கனையாக வரலாறு படைத்தார். மேலும் 1986 சியோல் ஆசிய விளையாட்டுப் போட்டியில் நான்கு பதக்கங்களைப் பெற்றார். 
 
இதனிடையே, நஸ்மிஸான் மற்றும் ஜீவன் ஆகியோரின் நியமனம் நிச்சயமாக இந்தக் குழுவின் தனித்துவத்தையும் பலத்தையும் அதிகரிக்கும். ஏனெனில் இருவருக்கும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நிறைய அனுபவங்கள் உள்ளன. 
 
முன்னாள் தேசிய ஸ்பிரிண்ட் சாம்பியனான நஸ்மிஸான், தற்போது மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராக உள்ளார். 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தோன்றியதோடு கூடுதலாக 2003 சீ விளையாட்டுப் போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். 
 
தற்போது அரச மலேசிய போலீஸ் படையில் பணியாற்றி வரும் ஜீவன், 2013 மற்றும் 2015 சீ விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு தங்கப் பதக்கங்களைத் தவிர, 2006 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தேசிய ஹாக்கி அணி வெண்கலம் வெல்லவும் உதவினார். 
 
பிஏஎம் மற்றும் பேட்மிண்டன் ஆசியாவின் பொதுச் செயலாளராக இருக்கும் கென்னி, அடிமட்டத்திலிருந்து அனைத்துலக அளவு வரை விளையாட்டு நிர்வாகத்தில் விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளார். 
 
 

WATCH OUR LATEST NEWS