ஷா ஆலாம், ஜூலை.08-
அரசியல்வாதிகள் தொடர்ந்து மோதல்களை நடத்தி வரும் நிலையில், இந்திய சமூகத்தின் அவலநிலை ஒரு தேசிய முன்னுரிமையாகவே இல்லை என்பதுதான் நடப்பு உண்மையாகும் என்று கிள்ளான் முன்னாள் எம்.பி. சார்ல்ஸ் சந்தியாகோ தமது ஆதங்கத்தைத் தெரிவித்துள்ளார்.
கட்டமைப்புச் சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்கான ஒரு தீவிரமான, நீடித்த முயற்சி, உண்மையான, உறுதியான மாற்றத்தை வழங்குவதை விட மதிப்பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் ஒரு வார்த்தைப் பிரயோகமாக மாறி வருகிறது என்று சார்ல்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய சமூகம் மீண்டும் அரசியல் நீரோடையில் ஓரங்கட்டப்பட்டுள்ளது. இந்தியர்களின் நடப்பு பிரச்னைகளுக்கும், அவர்களின் போராட்டங்களுக்கும் தீர்வுகளுக்குப் பதிலாக வழங்கப்படும் வார்த்தை ஜாலங்கள் உறுதிமொழி, மதிப்பீட்டுப் புள்ளிகளாக குறைக்கப்பட்டு வருகிறது.
அரசாங்கத்தின் மீது, குறிப்பாக செல்வாக்கு மிக்க பதவிகளில் இருப்பவர்கள் மீது, செலுத்தப்படும் கோபம், விரக்தி மற்றும் விமர்சனங்கள் தகுதியற்றவை அல்ல. சுதந்திரம் அடைந்து கிட்டத்தட்ட ஏழு தசாப்தங்களுக்குப் பிறகும், இந்தியர்களை “அதிகாரப்படுத்துவது” பற்றி நாம் இன்னும் ஒரு புதிய லட்சியம் போலப் பேசி வருவது ஒரு தேசிய அவமானமாகும் என்று சமுதாய சிந்தனையாளரான சார்ல்ஸ் வேதனைத் தெரிவித்துள்ளார்.
இந்திய சமூகம் இன்னமும் கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கான சமமான அணுகலுக்காகப் போராடுகிறது. இது ஒரு கொள்கை அளவிலான தோல்வி மற்றும் பின்னடைவு மட்டும் அல்ல. மாறாக, அனைத்து ஆளும் கூட்டணிகளிலும் பல தசாப்தங்களாக இந்திய சமுதாயத்தின் அரசியல் புறக்கணிப்பின் பிரதிபலிப்பாகும் என்று சார்ல்ஸ் தெரிவித்தார்.
உண்மையிலேயே இது பழிவாங்கும் சதுரங்க விளையாட்டின் மற்றோர் அத்தியாயமாக மாறக்கூடாது. குறிப்பாக, இது பெருமை பேசுவதற்கான நேரம் அல்ல. ஒவ்வொரு கட்சியும் ஒருவரையொருவர் எதிர்த்துப் பேசி, சமூகத்தின் செல்வாக்கிற்கான வலியை, ஆயுதமாகக் கொண்டுச் செயல்பட்டால், சுழற்சி மீண்டும் மீண்டும் நிகழும். ஆனால், தேசிய வளர்ச்சியிலிருந்து அந்நியப்படுத்தப்பட்ட மலேசிய இந்தியர்களின் மற்றொரு தலைமுறையை விட்டுச் செல்வதற்கான சூழல் ஏற்படும் என்று சார்ல்ஸ் நினைவுறுத்தினார்.
இரண்டு ஆண்டுகளில் ஒரு தனி நபர் என்ன செய்தார் என்பது கேள்வியாக இருக்கக்கூடாது, மாறாக அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எந்த கூட்டணியோ அல்லது கட்சியோ, அதில் மஇகா உட்பட நீடித்த சமூகத்தால் வழிநடத்தப்படும் முன்னேற்றத்திற்கான தளங்களை இந்தியர்களுக்காக ஏன் உருவாக்க முடியவில்லை என்பதுதான் தமது கேள்வியாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் நூருல் இஸ்ஸா, யாயாசான் இல்திஸாம் மலேசியா, சமூக மாற்றத்திற்கான நிலையான முயற்சியான எஸ்ஐசிசி, மற்றும் அரசாங்க சார்பற்ற அமைப்புகளின் குழுவினருடன் இணைந்து இந்திய சமூகத்திற்கான சமத்துவ, கட்டமைப்பு மாற்றத்தை மையமாகக் கொண்ட பரிந்துரைகளின் தொகுப்பை உருவாக்கியுள்ளார். இது 13வது மலேசியா திட்டத்தில் சேர்க்கப்படுவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளாகும்.
கல்விமான்கள், , சமூகப் பணியாளர்கள், வணிகர்கள் மற்றும் மகளிர், இளைஞர்கள் சமூகத் தலைவர்களுடன் இணைந்து இந்த பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது போதுமானதாக இல்லை என்றாலும் இது ஒரு தொடக்கப் புள்ளியாகும். அதற்கான பணி நடந்து கொண்டிருப்பதாக சார்ல்ஸ் தெரிவித்தார்.
இந்த களப் பணியில் 200 பேர் ஈடுபட்டுள்ளனர். இதன் விளைவாக சமூகத்தை மேம்படுத்த 40க்கும் மேற்பட்ட திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. இது இந்திய சமூகத்தால் இயக்கப்படும் அணுகுமுறையாகும் என்று சார்ல்ஸ் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.