கோலாலம்பூர், ஜூலை.08-
மாந்திரகத்தின் மூலம் தாம் எதையும் வசப்படுத்தக்கூடியவர் என்றும், தாம் ஒரு சூனியக்காரி என்றும் டிக் டோக்கில் பேசி, தம்மை அவமதித்ததாக நபர் ஒருவருக்கு எதிராக டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர் தொடுத்த அவதூறு வழக்கில் அந்த முன்னாள் பிரதமரின் துணைவியார் வெற்றி பெற்றுள்ளார்.
ரோஸ்மா மன்சோருக்கு மான நஷ்ட ஈடாக ஒரு லட்சம் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்கும்படி டிக் டோக்கில் கணக்கு வைத்திருக்கும் நபருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் தேதி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட அந்த செய்திக்காக 35 வயது கூ முகமட் ஹில்மி கூ டின் என்பவர், ரோஸ்மாவிற்கு ஒரு லட்சம் ரிங்கிட்டை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று நீதிபதி டத்தோ அஹ்மாட் ஷாரிர் முகமட் சால்லே உத்தரவிட்டார்.